இயேசு இறை மகனா?
பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே ‘இயேசு இறை மகனா?’ என்ற இந்த நூல்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட ஏழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் எட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.
‘இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர் கடவுளின் குமாரர் அல்லர்’ என்பதை பைபிளின் சான்றுகளிலிருந்தே ஆசிரியர் நிலை நாட்டுகிறார்.
கிறித்தவர்களுக்காக ஆசிரியர் எழுதிய இது தான் பைபிள்’, பைபிளில் நபிகள் நாயகம்’ ஆகிய நூல்களையும் நாம் வெளியிட்டோம்.
இம்மூன்று நூல்களுமே கிறித்தவ அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க ஏற்ற நூலாகும். நடுநிலைக் கண்ணோடு இதை வாசிக்கும் கிறித்தவர்கள் நிச்சயம் உண்மையை விளங்குவார்கள். அந்த அளவுக்கு வலிமையான வாதங்கள் இந்த நூல்களில் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூல்கள் நல்ல பயனை அளித்திட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
இவன்,
நபீலா பதிப்பகம்.
முன்னுரை
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல கர்த்தரின் திருநாமத்தால்…
இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர்’ என்றும் ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்த வாதிகளில் ஒருவர்’ என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறே இயேசுவை அறிமுகப்படுத்தியுள்ளதால் அப்படி நம்புவது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.
இயேசுவை நம்புகின்ற, அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்ற கிறித்தவ சமயத்தினர் இயேசுவைக் கடவுளின் குமாரர் என்றும் அவரே கடவுள் என்றும் நம்பி வழிபட்டு வருகின்றனர்.
உலகின் இரு பெரும் மார்க்கங்களால் ஏற்கப்பட்டுள்ள இயேசுவைப் பற்றிய சரியான முடிவு என்ன? இது பற்றி அலசும் கடமையும், உரிமையும் நமக்கிருக்கின்றது.
குர்ஆனில் இயேசுவைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ள வசனங்களை மேற்கோள் காட்டி இயேசு இறை மகனே’ என்று முஸ்லிம்களையும் நம்பச் செய்யும் முயற்சிகளில் கிறித்தவ சமயத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த அவசியம் மேலும் அதிகரிக்கின்றது.
பைபிளைப் பற்றியும், குர்ஆனைப் பற்றியும் ஞானமில்லாதவர்கள் கூடநியாயமான பார்வையுடன் ஆராய்ந்தால் கடவுளுக்கு மகனிருக்க முடியாது என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.
இப்படித் தெளிவான முடிவுக்கு வர வாய்ப்பிருந்தும் மத குருமார்களால் தவறாக வழி நடத்தப்பட்டு, சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்ற கர்த்தரின் போதனைக்கு மாற்றமாக, கடவுளுக்குக் குமாரனைக் கற்பித்து, பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடையும் வாய்ப்பை கிறித்தவ சகோதரர்கள் தவற விட்டு வருகின்றனர்.
எனவே இயேசு இறை மகனா? அல்லது மனிதரா? என்பதை பைபிளின் துணையுடன் இந்நூலில் விளக்கியுள்ளேன். இந்நூலை நான்கு பகுதிகளாக வகைப்படுத்தியிருக்கிறேன்.
எந்தக் காரணங்களால் இயேசுவை இறை மகன் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனரோ அந்தக் காரணங்களால் ஒருவரை இறை மகன் எனக் கூற முடியாது என்பதை முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.