இயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா?
இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டாரா? அல்லது தன்னைத் தானே காட்டிக் கொடுத்துக் கொண்டாரா என்பதில் சுவிஷேசங்கள் முரண்படுவது சிலுவைப் பலியில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
தனது சீடர்களில் ஒருவன் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு சீடர்கள் மத்தியில் கூறியதாகவும், காட்டிக் கொடுக்கும் யூதாஸிடம் நேருக்கு நேராகவும் இதை இயேசு கூறினார் என்றும், தன்னை முத்தம் செய்வதன் மூலம் அவன் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் ஒரு புறம் கூறுகிறது.
அவர்கள் போஜனம் பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத் தொடங்கினார்கள். அவர் பிரதியுத்தரமாக: என்னோடே கூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடி தான் என்றார்.
மத்தேயு 26:21-26
இவ்வாறு கூறும் மத்தேயு தனக்குத் தானே முரண்பட்டு கூறுவதைப் பாருங்கள்! அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான், அவனோடே கூடப் பிரதான ஆசரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அவரைக் காட்டிக் கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன் தான், அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
மத்தேயு 26:47-50
காட்டிக் கொடுப்பவன் வந்து முத்தம் செய்யும் போது என்னத்திற்காக வந்துள்ளாய் என்று இயேசு கேட்டதிலிருந்து தன்னைக் காட்டிக் கொடுக்கவே அவன் வந்துள்ளான் என்பது இயேசுவுக்குத் தெரியவில்லை. இயேசுவுக்கு இவன் முத்தம் செய்து காட்டிக் கொடுப்பான் என்பது இயேசுவுக்குத் தெரியும் எனக் கூறிய மத்தேயு இப்போது இயேசுவுக்குத் தெரியாது என்கிறார்.
இறைநேசன்