கல்லறைக்கு முதலில் வந்தவரில் முரண்பாடு
சிலுவையில் இருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடல் கல்லறைக்குள் வைக்கப்பட்டது. கல்லறைக்குள் வைக்கப்பட்ட உடல் காணாமல் போனது பற்றி நான்கு சுவிஷேசக்காரர்களும் முரண்பட்டுக் கூறுகிறார்கள்.
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
மத் 28:1
வாரத்தின் முதல் நாளில் மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் வந்து கல்லறையில் இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக மத்தேயு குறிப்பிடுகிறார்.
ஓய்வு நாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு.
மாற்கு 16:1
மகதலேனா மரியாளும் மற்றொரு மரியாளும் சலாமே என்பவளும் கல்லறையில் இருந்து இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக மாற்கு குறிப்பிடுகிறார்.
கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரிகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப் போய், கந்தவர்க்கங்களையும் பரிமள தைலங்களையும் ஆயத்தம் பண்ணி, கற்பனையின்படியே ஓய்வு நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
லூக்கா 23:55,56
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம் பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு வேறு சில ஸ்திரிகளோடுங் கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
லூக்கா 24:1
கலிலேயோவில் இருந்து வந்திருந்த பெண்களும் இன்னும் அநேக பெண்களும் வாரத்தின் முதல் நாளில் கல்லறைக்கு வந்து இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக லூக்கா கூறுகிறார்.
வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
யோவான் 20:1,2
இருட்டோடு இருட்டாக மகதலேனா மரியாள் மட்டும் வந்து கல்லறையில் இயேசுவின் உடல் காணாமல் போனதைப் பார்த்ததாக யோவான் கூறுகிறார்.
கல்லறையில் இயேசு காணாமல் போனதைக் கண்டவர் மகதலேனா மரியாள் மட்டுமா? அல்லது இரண்டு மரியாள்களா? அல்லது இரண்டு மரியாள்களுடன் சலாமே என்னும் பெண்ணும் ஆக மூவரா? அல்லது அநேக பெண்கள் கூட்டமா? இவற்றுள் எது சரி? தக்க ஆதாரம் இல்லாமல் ஆளாளுக்கு கற்பனை செய்து கூறியதால் தான் இப்படி முரண்படுகின்றனர்.
அபூ நபீலா