களவாடப்பட்ட இயேசுவின் உடல்
இயேசு சிலுவையில் அரையப்பட்ட காலத்தில் அவர் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கவில்லை. மாறாக அவரது உடலை அவரது சீடர்கள் திருடிச் சென்று விட்டு அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும் சீடர்களுக்குக் காட்சி தந்தார் என்று கதை கட்டியதாகவும் தான் அன்றைய மக்கள் நம்பினார்கள்.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய் என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
மத்தேயு 28:10
அவர்கள் போகையில் காவல் சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
மத்தேயு 28:11
இவர்கள் மூப்பரோடே கூடி வந்து ஆலோசனை பண்ணி சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து.
மத்தேயு 28:12
நாங்கள் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவனைக் களவாய்க் கொண்டு போய் விட்டார்கள். என்று சொல்லுங்கள்.
மத்தேயு 28:13
இது தேசாதிபதிக்குக் கேள்வியானால் நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
மத்தேயு 28:14
அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
மத்தேயு 28:15
மக்கள் அப்படி பேசிக் கொண்டதை மறுக்க முடியாத சுவிஷேசக்காரர்கள் யூதர்கள் பணம் வாங்கிக் கொண்டு இவ்வாறு கதை கட்டியதாக எழுதி வைத்துள்ளனர்.
உடலைக் காணவில்லை என்பது யதார்த்தமான உண்மை. இதைக் கூறுவதற்கு யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள். செத்தவர் உயிர்த்தெழுந்தார் என்பது இயற்கைக்கு மாறானது. ஆதாரமற்றது. இதைக் கூறுவதற்குத் தான் பணம் கைமாறி இருக்கும். சிலருக்குப் பணம் கொடுத்து இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கதை கட்டி விட்டு உண்மையைப் பொய்யாகச் சித்தரிக்கிறார்கள.
இயேசு உயிர்த்து எழுந்திருந்தால் அவரது குடும்பத்துப் பெண்கள் சிலருக்கும் அவரது சீடர்களுக்கும் மட்டும் காட்சி தந்திருக்க மாட்டார். எந்த மக்கள் அவரைச் சந்தேகப்பட்டு பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிலுவையில் அறைந்து கொலை செய்தார்களோ அவர்கள் நம்பும் வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் அவர் தோன்றி இருக்க வேண்டும். அப்படித் தோன்றி இருந்தால் சீடர்கள் உடலைக் களவாடிச் சென்று விட்டனர் என்று யூதர்கள் கருதி இருக்க மாட்டார்கள்.
இதுவும் உயிர்த்து எழுந்தது கட்டுக் கதை என்பதை நிரூபிக்கின்றது.
ஆண்டனி