மூல மொழி தவறலாமா?
எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன! அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர்காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக்,எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
ஒரு நூலை இறை வேதம் என்று மக்கள் நம்பினால் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாக்கவும் அந்த மொழியை வளர்க்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆயிரம் மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டாலும் மூலத்தை அவ்வளவு எளிதில் விட்டு விடமாட்டார்கள். மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.
இந்த மனித இயல்புக்கு மாற்றமாக, பைபிளை இறை வேதம் என்று நம்புகின்ற ஒரு பெரும் சமுதாயம் மூலமொழி நூலை எப்படித் தொலைத்திருக்க முடியும்? இது சிந்திக்க வேண்டிய கேள்வியாகும்.
அடுத்ததாக, வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எந்தச் சமுதாயத்தினரும் தங்கள் மொழியைக் காப்பதில் அதிக சிரத்தை மேற்கொள்வார்கள். உலகில் மாபெரும் நிலப்பரப்பபை நீண்ட நெடுங்காலம் ஆட்சி புரிந்து, உலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்ரவேலர்கள் தங்களின் மூலமொழியை எப்படி கை கழுவினார்கள்? இதுவும் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.
மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஹிந்து மதத்தினரை உதாரணமாக நாம் கொள்வோம்.
பைபிளை விட மிகவும் பழமையான வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் ஹிந்துக்கள். வேதம் என்று நம்புகின்ற நூல்கள், அவர்கள் மூலமொழி என்று நம்புகின்ற சமஸ்கிருத மொழியில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. பேச்சு வழக்கில் அம்மொழி செத்து விட்டாலும் அதை அறிந்திருப்பவர்களை இன்றளவும் நாம் காணலாம். காலம் சென்ற இராஜாஜி, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற துக்ளக்’சோ” ராமசாமி ஆகியோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இன்னும் ஏராளமான பிராமனர்கள் தங்கள் வேதத்தை அதன் மூலமொழியகிய சமஸ்கிருதத்திலேயே அறியக் கூடியவர்களாக உள்ளனர். சமஸ்கிருதக் கல்லூரிகளும் கூட அம்மதத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன.
வேதத்துக்கு சொந்தக்காரர்களும் வரலாற்றுப் பாரம்பர்யம் உடையவர்களும் எளிதில் தங்கள் மொழியை விட்டு விடமாட்டார்கள் என்பதற்கு இது மறுக்க முடியாத ஆதாரமாகும்.
இந்த நிலையில் பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படாமல் போனதைத் தற்செயலானது என்று நம்ப முடிவில்லை. அன்றாடம் மக்களால் படித்துப் பாதுகாக்கப்படுகின்ற வேதம் அதன் மூலமொழியில் பாகாக்கப்படாமல் போனது இயற்கையான விபத்து என்றும் நம்ப முடியவில்லை.
அந்த மொழியின் காவலர்களாக விளங்கிய மதகுருமார்களே திட்டமிட்டு இந்த நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். அவர்களைத் தவிர மற்றவர்களால் இத்தகைய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற மொழியை ஒழித்திருக்க முடியாது.
பைபிள் அதன் மூலமொழியில் இருக்கும் நிலையில் அந்த மூலமொழியை அறிந்த மக்களும் இருப்பார்களானால் தங்கள் சொந்தச் சரக்கைச் சேர்க்க முடியாது என்று கருதிய மதத் தலைவர்கள் திட்டமிட்டே அம்மொழியையும், மூல நூலையும் ஒழித்துக் கட்டி விட்டனர்என்பதே உண்மை.
இதை ஆதாரமற்ற அனுமானம் என்று எவரும் கருதிவிட வேண்டாம். கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த வேதத்தில் சேர்த்தவை, நீக்கியவை, மாற்றியவை, மறைத்தவை,ஏராளம்! அவற்றைப் பிறகு தக்க சான்றுகளுடன் உங்களுக்கு விளக்குவோம்.
ஆகையால், வேதம் அதன் மூலமொழியில் பாதுகாக்கபடாமல் போனதைச் சாதாரணமான விஷயமாகக் கருதிவிடக் கூடாது. இறை வேதம் என்ற நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் மிகப் பெரிய விஷயமாகவே இதை நீங்கள் கருத வேண்டும்.
மூலமொழியில் உள்ள பைபிள் தொலைந்து போனது தற்செயலான ஒன்று தான் என்று இதற்குப் பிறகும் எவராவது நம்பினால் அப்போதும் கூட மதகுருமார்கள் மீதுள்ள சந்தேகம் வேண்டுமானால் நீங்கலாமே தவிர, பைபிளின் மீதுள்ள சந்தேகம் நீங்கிவிடப் போவதில்லை.
மூலத்திலிருந்து மொழிமாற்றம் செய்தவர்சில இடங்களில் தவறாக மொழி மாற்றம் செய்திருக்கலாம்; சில வார்த்தைகளை அவர்விட்டிருக்கலாம். வேண்டுமென்று இப்படிச் செய்யாவிட்டாலும் மனிதன் என்ற முறையில் எவரிடமிருந்தும் இத்தகைய தவறுகள் நிகழ்வது சகஜம் தான்.
கிரேக்க மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பைபிள் சரியான முறையில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய மூலத்துடன் ஒப்பு நோக்கியாக வேண்டும். மூலமே இல்லை என்ற நிலையில் சந்தேகம் நீங்க வழியில்லை. எந்த இடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிய வழியில்லாத போது ஒவ்வொரு வசனமும் ‘தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டது இந்த வசனமாக இருக்குமோ?” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மொத்த பைபிளையும் சந்தேகத்திற்குரியதாக்கி விடுகின்றது.
கர்த்தரின் அடிமை