Menu

உளறல்
பைபிளில் உள்ள உளறல்கள்

nobanner

download-21

யதார்த்தமான நிலமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் பைத்தியகரத்தனமாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடு இருக்கலாகாது என்பதைப் பைபிளும் கூட ஒப்புக் கொள்கிறது.

ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே  சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால் அது கர்த்தர்சொல்லாத வார்த்தை. அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினாலே சொன்னான். அவனுக்கு நீ பயப்பட வேண்டாம்.

(உபாகமம் 18:22)

பைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா? இதை நாம் ஆராய்வோம்.

அ) ஆடைக்கும் குஷ்டரோகம்

தொழு நோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால், குடியிருக்கும் வீட்டுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவரும் நம்ப மாட்டார்கள். அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால், பைபிள் ஆடைகளுக்கும் வீடுகளுக்கும் கூடத் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

ஆடையில் குஷடரோகம் தோன்றினால் அது கம்பளி ஆடையானாலும் பஞ்சு ஆடையானாலும் பின்னிய துணியானாலும் பஞ்சுத் துணியானாலும் கம்பளித் துணியானாலும் தோலானாலும் தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அதில் காணும் ரோகம் பச்சை நிறமாயாவது சிவப்பு நிறமாயாவது காணப்பட்டால் அது ஆடையானாலும் தோலானாலும் நெய்த துணியாலானாலும் தோலினால் பின்னிய துணியானாலும் தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அது குஷ்ரோகமே.

அதை ஆசரியனுக்குக் காண்பிக்க வேண்டும். ஆசாரியன் அதைப் பார்த்து ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். ஏழாம் நாளில் ரோகம் உள்ளதைப் பாரக்கும் பொழுது ஆடையிலோ நெய்த துணியிலோ பின்னிய துணியலோ தோலிலோ தோலினால் செய்த எந்தப் பொருளிலோ ரோகம் அதிகப்பட்டிருக்கக் கண்டால் அது அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாகும்! அந்த ரோகமிருக்கிற ஆடையையும் நெய்த துணியையும் பின்னிய துணியையும் சுட்டெரிக்க வேண்டும். அது கம்பளியானாலும் சரி; துணியானாலும் சரி; தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் சரி; அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும்.

ஆசாரியன் பார்க்கும் போது ஆடையிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது அந்த ரோகம் அதிகப்படவில்லை என்று கண்டால் ரோகமுள்ளதைத் துவைக்கச் சொல்லி அதை மறுபடியும் ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். அது துவைத்து வைக்கப்பட்ட பின் ஆசாரியன் அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் போது அந்த ரோகம் பரவாதிருந்தும் அதன் நிறம் மாறாதிருந்தால் அது அசுத்தமே. நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும். அது துணியின் உட்புறத்திலிருந்தாலும் வெளிப்புறத்திலிருந்தாலும் அது அரிக்கிற ரோகமே.

துவைக்கப்பட்ட பின் நிறம் மங்கிப் போயிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில் அது ஆடையிலாவது தோலிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது இராதபடி கிழித்துப் போட வேண்டும். அது இன்னும் ஆடையிலாவது நெய்த துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது காணப்பட்டால் அது வெளிப்பட்டுத் தோன்றுகின்ற ரோகமே. அந்த ரோகம் உள்ளதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். ஆடையாவது நெய்த துணியாவது பின்னிய துணியாவது தோலினால் செய்த எந்தப் பொருளாவது துவைக்கப்பட்ட பின் அந்த ரோகம் அதை விட்டுப்போயிற்றேயானால் அதை இரண்டாம் தரமும் துவைக்க வேண்டும். அப்பொழுது சுத்தமாகும். கம்பளி ஆடை, பஞ்சு ஆடை, நெய்த துணி, தோலினால் செய்த எவ்வகைப் பொருள் ஆகிய இவற்றுக்குரிய குஷ்ரோகப் பரிகாரம் இதுவே.

இவை அப்படியே பைபிளில் இடம்பெற்ற வாசகங்கள்! லேவியராகமம் 13ஆம் அதிரகாரம் 47 முதல் 59 வரையிலான வசனங்கள்.

குஷ்டரோகமும் அதற்குப் பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக,பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்;று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக் கூட நீங்கள் சோதிக்க முடியாது, ஆசாரியன் தான் சோதிக்க வேண்டும். பாவம் பெண்கள்…!

இது கர்த்தர்சொன்னதா? அல்லது கள்ளத் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டதா?கர்த்தர்சொல்லியிருந்தால் அந்தக் கர்த்தரின் ஞானம் எவ்வளவு விசாலமானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஆ) வீட்டுக்கும் குஷ்டரோகம்

இனி வீட்டுக் குஷ்டத்தையும் விபரமாக அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் காணியாட்சியான தேசத்திலே ஒரு வீட்டிலே குஷ்டரோகத்தை நான் வரப் பண்ணினால் அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டில் ரோகம் போன்றதொன்று வந்திருக்கிறதாகத் தோன்றுகின்றது என்று ஆசாரியனுக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் அசுத்தமாய்ப் போகாதபடி அந்த ரோகத்தைப் பார்க்கப் போகும் முன்னே வீட்டை ஒழித்து வைக்கும்படிச் சொல்ல வேண்டும். பின்பு ஆசாரியன் போய் அந்த வீட்டைப் பார்க்க வேண்டும். அந்த ரோகம் இருக்கிற இடத்தைப் பார்க்கும் போது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான கறைகள் உண்டாயிருக்கவும் அவைகள் சுற்றிலுமிருக்க சுவருக்கு பள்ளமாயிருக்கவும் கண்டால் ஆசாரியன் வீட்டை விட்டு வெளியே வாசற்படியில் வந்து வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும்.

ஏழாம் நாளில் அவன் திரும்பப் பார்க்கும் போது ரோகம் வீட்டுச் சுவர்களில் பரவினதென்று கண்டால் ரோகம் இருக்கும் கற்களைப் பெயர்த்து ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடச் சொல்ல வேண்டும். வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச் சொல்லி செதுக்கிப் போட்ட மண்ணை ஊருக்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்தில் கொட்டவும் வேறு கற்களை எடுத்து வந்து பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வைத்துக் கட்டி வேறு சாந்தைக் கொண்டு வீட்டைப் பூசவும் கட்டளையிட வேண்டும். கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கிப் புதிதாய் பூசின பின்பும் ரோகம் மறுபடியும் வீட்டில் வெளிப்படத் தோன்றுமானால் ஆசாரியன் போய்ப் பார்க்க வேண்டும்.

பார்க்கும் போது ரோகம் வீட்டில் பரவியிருக்கிறதென்று கண்டால் அது வீட்டில் உண்டாகும் அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாம். ஆகவே வீட்டை இடித்து அதன் கற்களையும் மரங்களையும் அதன் சாந்து எல்லாற்றையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொண்டு போய்ப் போடவேண்டும்.

வீடு அடைபட்டிருக்கும் நாட்களில் அதற்குள் செல்லுகிறவன் சாய்ங்கால மட்டும் தீட்டப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் துவைக்க வேண்டும். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் துவைக்க வேண்டும்.

ஆசாரியன் திரும்ப வந்து பார்க்கும் போது வீடு பூசப்பட்ட பின் வீட்டிலே ரோகம் பரவவில்லை என்று கண்டானேயாகில் ரோகம் நிவர்த்தியாகி விட்டபடியால் ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்க வேண்டும். அப்பொழுது ஆசாரியன் வீட்டுக்குத் தோஷங்களைக் கழிக்க இரண்டு குருவிகளையும் கேதுருக்கட்டைகயையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரின் மேல் கொன்று, கேதுருக்கட்டையையும் ஈசோப்பபையும் சிவப்பு நூலையும் உயிருள்ள குருவியையும் எடுத்துக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் இவைகளைத் தோய்த்து வீட்டின் மேல் ஏழுதரம் தெளிக்க வேண்டும்.

லேவியராகமம் 14ஆம் அதிகாரம் 34 முதல் 52 வரையிலான வசனங்கள் இவை.

இவை போல் அனேக தமாஷ்கள் லேவியராகமம் முழுவதிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை எழுதிப் பக்ககங்களை வீணடிப்பதை விடக் கிறித்தவர்களே லேவியராகமத்தைக் கருத்தூன்றி படிக்கும்படி விட்டு விடுகிறோம். இதை இறை வேதம் என்று நம்புவது கிடக்கட்டும்! புத்தி சுவாதீனமுள்ள மனிதனின் கற்பனை என்றாவது உங்களால் நம்ப முடிகின்றதா? இதை எப்படி இறை வேதம் என்று நம்புகின்றீர்கள்? உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.

இதே அளவுகோலில் இன்னும் சிலவற்றை அளந்து பார்ப்போம்.

இ) பலிக்காத சாபம்

கடவுள் ஆதாமையும் அவருக்குப் பதிலாக ஏவாளையும் படைத்தான். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனிகளை மட்டும் உண்ணக் கூடாது என்று அவர்களுக்குக் கடவுள் தடை விதித்திருந்தான். அவர்களிருவரும் கடவுளின் இந்தக் கட்டளையை மீறி அந்தக் கனியை உண்டார்கள்.

இந்தச் சம்பசவத்தை ஒட்டி, பைபிள் கூறும் சில  விஷயங்களை மேற்கண்ட அளவுகோலால் அளந்து பார்க்கும் பொழுது பைபிள் இறை வேதத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றது என்பதை எவரும் உணரலாம். பைபிள் கூறுகிறது:

ஸ்திரீயிடமோ நீ கற்பவதியாய் இருக்கும் போது உன் வாதையை மிகவும் பெருகப் பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்றார்.

(ஆதியாகமம் 3:16)

கர்த்தரின் கட்டளையை மீறியதற்காகக் கடவுள் இட்ட சாபம் இது! இது எத்தனை வகைகளில் பொருந்தாமல் போகின்றது என்பதை உங்கள் அறிவில் உரசிப் பாருங்கள் நண்பர்களே!

பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்படுகின்றது என்பது உண்மை தான். கடவுள் சொல்லா விட்டாலும் கூட இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் சரியா? பொருத்தமானது தானா? என்பதே ஆராய வேண்டிய விஷயம்.

1: கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியை உண்டதற்காகத் தான் இந்தச் சாபம் என்றால் கட்டளையை மீறியது ஏவாள் மட்டுமல்லவே? ஆதாமும் கூட கட்டளையை மீறயவர் தாமே! பாவத்தில் சம பங்கு கொண்ட அவருக்கும் மற்ற ஆண்களுக்கும் ஏன் பிரசவமோ, பிரசவ வலியோ ஏற்படுவதில்லை?

2: ஏவாள் கடவுளின் கட்டளையை மீறிக் கனியை உண்டதனால் அவருக்கு மட்டும் தானே பிரசவ வலி ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தில் சம்பந்தப்படாத மற்ற பெண்களுக்கும் ஏன் பிரசவ வலி ஏற்பட வேண்டும்?

3: பெற்றோரின் குற்றம் பிள்ளைகளைச் சேரும் என்று கிறித்தவ உலகம் சமாளிக்குமானால் ஏவாள் பெற்றெடுத்த ஆண்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கிருக்க வேண்டுமே? ஏவாளின் சந்ததிகளான ஆண்களுக்கு அந்த வலி ஏற்படுவதில்லையே அது ஏன்?

4: தாயின் தவறில் அவரது பெண் சந்ததிகளுக்கும் தந்தையின் தவறில் அவரது ஆண் சந்ததிகளுக்கும் தான் பங்கு உண்டு என்று கிறித்தவ உலகம் தங்களின் கோட்பாட்டிற்கு விளக்கமளிப்பார்களானால் ஏவாள் பெற்றெடுத்த எல்லாப் பெண்களுக்கும் இந்த வலி ஏற்பட வேண்டுமே? மலடிகளுக்கும் மலட்டு ஆண்களை மணந்து கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே? அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது? கிறித்தவக் கோட்பாடு தான் என்னாவது? பிரசவிக்காத பெண்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கு இல்லையா? அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா? அவர்கள் தாய் வயிற்றில் பிறக்காமல் தாமாகத் தோன்றியவர்களா?

கிறித்தவக் கன்னியாஸ்திரீகளின் நிலை என்ன? பைபிளின் கொள்கை என்னாவது?

5: பாவத்தின் நிமித்தம் கடவுள் இட்ட சாபம் தான் பிரசவ வலி என்றால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் அந்த வலி இருக்க வேண்டும் ஆடு,மாடு உள்ளிட்ட பிரசவிக்கும் அனைத்து உயிரினங்களும் பிரசவ வலியால் துடிக்கின்றனவே! அது ஏன்? எல்லா ஜீவராசிகளின் தாய்களும் கர்த்தரின் கட்டளைகளை மீறி விலக்கப்பட்ட கனியை உண்டுவிட்டனவா?

இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகளை இந்த வசனம் எழுப்பத் தூண்டுகிறது. கர்த்தர் சொன்ன பிரகாரம் எல்லாப் பெண்களுக்கும் (மலடிகள் உட்பட) பிரசவ வலி ஏற்படாததால் இது கள்ளத் தீர்க்கதரிசி தன் துணி கரத்தினாலே உண்டு பண்ணிச் சொன்னது என்பது தெளிவாகின்றது.

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்! அவர்களால் இந்தக் கேள்விகளுக்கு நியாயமான விடை அளிக்கவே முடியாது. கள்ளத் தீர்க்கதரிரசிகள் உண்டு பண்ணிச் சொன்னவைகளும் பைபிளில் உள்ளன என்ற உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ஈ) கால்களை இழந்த பாம்புகள்

இதே சம்பவத்தின் தொடரில் பைபிளில் இடம் பெற்றுள்ள மற்றொரு அபத்தத்தையும் பாருங்கள்! விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு ஏவாளைத் தூண்டியது பாம்பு என்று பைபிள் கூறுகின்றது. அதனால் கடவுள் பாம்புக்குச் சாபம் கொடுத்ததாகவும் கூறுகின்றது.

கடவுளாகிய கர்த்தர்உண்டாக்கின சகல காட்டு ஜன்துக்களிலும் சர்ப்பமே தந்திரம் உள்ளதாயிருந்தது.

(ஆதியாகமம் 3:1)

நீ இதைச் செய்தபடிளால் சகல நாட்டு மிருகங்களுக்கும் சகல காட்டு மிருகங்களுக்கும் விலக்கப்பட்டுச் சாபத்துக்குள்ளாவாய். கடவுளாகிய கர்த்தர்சர்ப்பத்தைப் பார்த்து உன் வயிற்றினாலேயே நீ நகர்ந்து உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்றார்.

(ஆதியாகமம் 3:14)

1: மனிதனைத் தவறான வழியில் செலுத்தும் அளவுக்குப் பாம்புக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் இன்று எந்தப் பாம்பும் மனிதனையும் தவறான வழியில் செல்லத் தூண்டுவதில்லையே! அது ஏன்?

2: கடவுள் படைத்த காட்டு ஜீவராசிகளில் பாம்பு அளவுக்குத் தந்திரம் படைத்தது எதுவுமில்லை என்றால் தந்திரம் உள்ள எந்தப் பாம்பையும் நாம் காணவில்லையே?பாம்பு அளவுக்கு முட்டாள் தனம் நிறைந்த ஜீவராசியையும் அதிகமாக அடிபட்டுச் சாகும் ஜீவராசிகளையும் நாம் காணமுடியவில்லையே ஏன்?

3: நரிகள், பச்சோந்திகள், மீன் கொத்திப் பறவைகள், கொக்குகள், காகங்கள் போன்றவை பாம்பை விடப் பல மடங்கு தந்திரம் கொண்டதாக உள்ளனவே. ஒரு வேளை கர்த்தர்படைத்தவைகளில் அவை அடங்கவில்லையா?

4: ஏவாளைக் கெடுத்ததனால் பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன என்றால் ஏவாளைக் கெடுப்பதற்கு முன்னால் கால்களால் அவை நடந்து சென்றனவா?

5: ஏவாளைக் கெடுத்ததற்காகத் தான் பாம்புகள் தரையில் ஊர்ந்து செல்கின்றன என்றால் அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத பல நூறு புழுவினஙகள் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றனவே! அது ஏன்?

6: தரையில் ஊர்ந்து செல்லாமல் தண்ணீரில் செல்லும் பாம்புகள் வயிற்றால் நகர்ந்து செல்லவில்லையே! அவை விஷயத்தில் கர்த்தரின் சாபம் பலிக்கவில்லையே! அது ஏன்?

7:  நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்;று கடவுள் இட்ட சாபம் பலிக்கவில்லையே! அது ஏன்? கிறித்தவ நண்பர்களே! மண் தின்னும் பாம்புகள் எங்காவது உண்டா?

பதிலளிக்க முடியாத இத்தனை கேள்விகளை எழுப்பக் கூடிய வசனங்கள் கர்த்தர்சொன்னவையா? கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவையா? நியாய உணர்வுடன் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

உ) அதிசயப் பிரசவம்

நடந்திருக்க முடியாத, நம்ப முடியாத விஷயங்களின் வரிசையில் மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

ஒரு பெண் தன் மாமனாருடன் தகாத முறையில் உறவு கொண்டு கர்பமாகி விடுகிறாள். (இந்தச் சம்பவம் பின்னர்விவரமாகக் கூறப்படும்) அவளது கர்ப்பத்தில் இரண்டு குழந்தைகள் உருவாயின. அது பற்றி பைபிள் கூறுவதைக் கவனியுங்கள்:

அவளுக்குப் பிரசவ காலம் வந்த போது அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பிரசவிக்கும் போது ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து அதில் சிவப்பு நூலைக் கட்டி இது முதலில் வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது அதன் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள் ‘நீ மீறியது என்ன?” என்று சொன்னாள்.

(ஆதியாகமம் 38:27-30)

இவ்வாறு நடந்திருக்க முடியாது என்பது தெளிவானது. இதிலிருந்து எழும் கேள்விகளுக்குக் கிறித்தவ உலகம் பதிலளிக்கட்டும்!

1: பிரசவத்தின் போது தலை தான் முதலில் வெளிப்பட வேண்டும். அது தான் சுகப் பிரசவமாக இருக்க முடியும். இல்லையென்றால் அன்றைய்ச் காலத்தில் தாயின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். முதலில் கை வெளிப்பட்டதும் மருத்துவச்சி திடுக்கிட்டிருக்க வேண்டும். இந்த ஆபத்தான கட்டத்தில் மருத்துவச்சி சிவப்பு நூலைக் கட்டியிருப்பாளா?

2: கையை நீட்டிய குழந்தை கையை உள்ளே இழுத்துக் கொள்ளும் என்பதும் கர்ப்பத்தில் இன்னொரு குழந்தை இருந்ததும் மருத்துவச்சிக்கு எப்படித் தெரிந்தது?

3: இதையெல்லாம் எதிர்பார்த்துச் சிவப்பு நூலை அவள் எடுத்துச் சென்றாளா?

4: கர்ப்ப அறையின் வாசலை ஒரு குழந்தை அடைத்துக் கொண்டிருக்கும் போது அதன் சகோதரன் எப்படி வெளிப்பட முடியும்?

இப்படி ஏராளமான கேள்விகள்! இந்தக் கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும். விபச்சாரத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் பிரசவித்த முறையை விலாவாரியாகக் கடவுள் விளக்க வேண்டுமா? இதனால் பயன் என்ன?

ஊ) உறைந்த இரத்தம் பீறிட்ட அதிசயம்

இதே போன்ற இன்னொரு கதையைக் கேளுங்கள்! ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது உடலில் இருந்த இரத்தம் உறைந்து விடும் என்பது நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. இறந்தவனைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அவனிடமிருந்து இரத்தம் எதுவும் பீறிட்டு வராது என்பதிலும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. இந்த உண்மையை பைபிள் விளக்குவதைக் கேளுங்கள்!

அவர்கள் இயேசுவினடத்தில் வந்து அவர்மரித்திருக்கறதைக் கண்டு அவருடைய கால் எழும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

(யோன் 19:33,34)

கிறித்தவ நம்பிக்கையின் படி-பைபிளின் கூற்றுப்படி- இயேசு சாதாரணமாக மரிக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கிறார். இவ்வாறு சிலுவையில் அறையப்பட்டதனால் அவரது உடலிலிருந்த இரத்தம் முழுமையாக வெளியேறி இருக்கும். அதன் பின்னர்அவர்மரித்து விட்டதால் ஏதேனும் இரத்தம் அவர்உடலில் மீதமிருந்தால் அதுவும் உறைந்து போயிருக்கும். அவரது விலாவில் ஈட்டியால் குத்தினால் இரத்தம் எப்படி புறப்பட்டிருக்கும்? இதைச் சிந்தித்தாலும் இது கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது என்பதை விளங்கலாம்.

இவை போல் நம்ப முடியாதவைகளும் நடைமுறைச் சாத்தியமற்றவைகளும் பைபிளில் ஏராளம் மலிந்து காணப்படுகின்றன. மாதிரிக்குச் சில விஷயங்களை மட்டுமே கூறியிருக்கின்றோம். கடவுள் சென்னதாக இருந்தால், அது எந்தத் தகுதியில் இருக்க வேண்டும் என்று பைபிளே ஒப்புக் கொள்கின்றதோ அந்தத் தகுதி நிச்சயமாக பைபிளுக்கு  இல்லை. இந்தக் காரணத்தாலும் பைபிள் இறை வேதமல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

விசுவாசி

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

%d bloggers like this: