இஸ்ரவேலருக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்ட இயேசு
இயேசுவும் இன்னும் பல தீர்க்கதரிசிகளும் தத்தமது இனத்துக்காக அனுப்பப்பட்டனர். இயேசு அனுப்பப்பட்டது உலக மக்களுக்காக அல்ல. இஸ்ரவேல் என்ற ஒரு இனத்துக்காகவே அனுப்பப்பட்டார். ஆனால் அதை மீறி அதை எதிர்த்து இஸ்ரவேல் அல்லாதவர்களுக்கும் நான் பிரச்சாரம் செய்வேன் என்று பவுல் மாற்றம் செய்தார். இயேசுவின் போதனைக்கு மதிப்பில்லாமல் ஆக்கினார்.
அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றப்படியல்ல வென்றார். அவள் வந்து: ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். அதற்கு அவள்: மெய் தான் ஆண்டவரே ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.
மத்தேயு 15:22-28
இஸ்ரவேலர்களுக்குப் பிரச்சாரம் செய்யும் அதிகாரம் மட்டுமே தனக்கு உள்ளது என்றும் மற்றவர்களுக்கு அல்ல என்றும் இயேசு கூறியதை மத்தேயு கூறுவது போலவே மற்ற மூன்று சுவிஷேசங்களும் கூறுகின்றன.
இயேசு தனது சீடர்களுக்கும் இதையே கட்டளையாகப் பிறப்பித்தார். இஸ்ரவேல் இனத்தில் இருந்த பன்னிரண்டு கோத்திரத்தாருக்கு மட்டும் பிரச்சாரம் செய்யுமாறு தான் கட்டளையிட்டார்.
நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம் பண்ணி இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின் மேல் உட்காருவீர்கள் என்றார்.
லூக்கா- 22:30
அதற்கு இயேசு: மறு ஜென்ம காலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 19:28
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
மத்தேயு 10:6
இஸ்ரவேல் அல்லாத மக்களுக்கு கிறித்தவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று இயேசு சொல்லி இருக்க அவரது சீடர்களும் அவ்வாறே வழி நடந்திருக்க பவுல் தான் இதையும் மாற்றியதாக வாக்கு மூலம் தருகிறார்.
அதனடிப்படையில் தான் பாதிரிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால் இதோ நாங்கள் புற ஜாதியாரிடத்தில் போகிறோம்.
அப்போஸ்தலர் நடபடிகள் 13:46
இஸ்ரவேல் மக்கள் தவிர மற்றவர்களுக்கு தனது கொள்கையைப் பிரச்சாரம் செய்வதை அடியோடு இயேசு மறுத்திருக்கும் போது, இஸ்ரவேலர்கள் ஆடுகள் எனவும், மற்ற சாதியினர் நாய்கள் எனவும் கூறி இருக்கும் போது இயேசுவின் வழிகாட்டுதலை மீறுவது எப்படி கிறித்தவமாகும்? இது எப்படி இயேசுவை மதித்ததாக ஆகும்?
அப்துல்லாஹ்