கர்த்தரின் குமாரர் யார்?
இயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ‘இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்‘என்று உரைத்தது.
(மத்தேயு 3:17)
‘என்னுடைய நேச குமாரன்‘ என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்?
என்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.
கர்த்தர் தனது நேசகுமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
பைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.
பைபிளில் இறை மகன்‘ என்று குறிப்பிடப்பட்டவர்கள் பற்றிய விபரத்தைக் காண்போம்.
இஸ்ரவேல் இறை மகன்
அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் ‘இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்‘ என்றார்.
(யாத்திராகமம் 4:22,23)
இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.
(எரேமியா 31:9)
இயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும்.
இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. அசரீரியான சப்தம் தான் அவ்வாறு கூறியதாகக் காணப்படுகிறது. அது கடவுளின் சப்தமாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிசாசு கூட இவ்வாறு விளையாடி இருக்க முடியும்.
முன்பொரு முறை பிசாசு இயேசுவைச் சோதித்ததாக மத்தேயு 4:9,10 வசனங்கள் கூறுகின்றன.
ஆனால் இஸ்ரவேலைக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்.
இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!
தாவீது இறை மகன்
நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்‘ (சங்கீதம் 2:7)
என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.
நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக்குமாரனாய் இருப்பான்.
(முதலாம் நாளாகமம் 17:13)
சாலமோன் இறை மகன்
அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
(முதலாம் நாளாகமம் 22:10)
எப்ராயீம் இறை மகன்
இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
(எரேமியா 31:9)
சாமுவேல் இறை மகன்
நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.
(இரண்டாம் சாமுவேல் 7:14)
இயேசு இறை மகன்‘ எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்? இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன்‘ எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானதாகும்.
எல்லா மக்களும் தேவ குமாரர்கள்
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்! (உபாகமம் 14:1)
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார்.
(சங்கீதம் 68:5)
திக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால் ‘அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே! அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே! எங்களுக்கு உதவுங்கள்‘ என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே? அது ஏன்?
இறை மகன்‘ எனும் அடைமொழி கடவுளின் புத்திரர்கள்‘ எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை;இறைவனின் அடியார்கள்‘ எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
இறை மகன்‘ என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
இயேசுவின் வாக்கு மூலம்
மேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன் மக்களைக் கடவுளின் புத்திரர்கள்‘ என்று சொல்லியிருக்கிறார்.
மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார். (மத்தேயு 6:14,15)
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்.
(மத்தேயு 5:9)
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.
(மத்தேயு 5:45)
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
(மத்தேயு 7:11)
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
(மத்தேயு 23:9)
அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
(யோவான் 1:12)
அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
(லூக்கா 6:35)
பவுல் வாக்கு மூலம்
இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைந்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே. ஆனால் இவர் கூட தன்னையுமறியாமல் இறைவனுக்கு மட்டும் மகனாக இருக்க முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.
நாம் தேவனுடைய சந்ததியராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுத்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
(அப்போஸ்தலர் 17:29)
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி
கொடுக்கின்றார்.
(ரோமர் 8:16)
அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்.
(இரண்டாம் கொரிந்தியர் 6:18)
* எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.
* இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.
* இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.
இதிலிருந்து குமாரர்‘ எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
புதல்வர்கள்‘ எனும் அர்த்தத்திலே அப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் பிறகும் கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அனைவருமே புதல்வர்கள் தாம் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
இப்னு பீர் முஹம்மது