Browse By

கிறிஸ்தவ கொள்கை

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

He_paid_a_debt-209x300

அல்லாஹ் எனும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்கிறான். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவனைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பதை நம்புவதும், மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களில் இருந்தே தூதர்களை இறைவன் நியமித்து வந்தான். அந்தத் தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி என்பதை நம்புவதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இக்கொள்கையை ஒருவன் நம்பினால் தான் அவன் முஸ்லிமாக முடியும்.

உலகின் மிகப் பெரிய மதங்களில் ஒன்றாகத் திகழும் கிறித்தவ மதத்தின் கொள்கை என்ன? ஒருவன் கிறித்தவனாவதற்கு அவன் கொள்ள வேண்டிய கொள்கை என்ன?

கர்த்தர் (இறைவன்) முதன் முதலாக ஆதாம் என்பவரைப் படைத்தார். அவருக்குத்  துணையாக ஏவாள் எனும் பெண்ணைப் படைத்து அவ்விருவரையும் ஏடன் எனும் தோட்டத்தில் தங்க வைத்து எல்லாவிதமான கனி வகைகளையும் அங்கே கிடைக்கச் செய்தார். இந்தத் தோட்டத்தில் விரும்பியவாறு உண்ணுங்கள்; ஆனால் குறிப்பிட்ட மரத்தின் கனியைப் புசித்து விட வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்திருந்தார்.

ஆதாமும் ஏவாளும் அந்தக் கட்டளையை மீறி தடுக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்தனர். இதனால் அவர்கள் பாவிகளானார்கள். அவர்கள் பாவிகளானதால் அவர்களின் சந்ததிகளும் பாவிகளாகப் பிறக்கின்றனர்.

எந்த ஒரு பாவம் செய்தாலும் அதற்குப் பாவ நிவாரணப் பலி கொடுக்க வேண்டும். ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக மனிதர்கள் பாவிகளாகப் பிறப்பதால் மிகப் பெரும் பலியைக் கொடுத்தால் தான் அந்தப் பாவம் மனிதனை விட்டு விலகும். அதற்காக இயேசு தன்னையே பலியிட்டு அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரம் தேடி விட்டார்.

இயேசு நமக்காக தன் உயிரையே கொடுத்தார் என்று ஒருவன் நம்பினால் தான் பிறவிப் பாவம் விலகும். இயேசு நமக்காகப் பலியானார் என்பதை யார் ஒப்புக் கொள்ளவில்லையோ அவரை விட்டு பிறவிப் பாவம் (ஜென்மப் பாவம்) நீங்காது.

இந்தக் கொள்கையின் மீது தான் கிறித்தவம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

இக்கொள்கையை கர்த்தரோ இயேசுவோ வழங்கவில்லை. இயேசுவுக்குப் பின் கிறித்தவ மதத்தில் இணைந்து கொண்ட பவுல் என்பவர் தான் இக்கொள்கையை உருவாக்கினார். இது குறித்து இந்நூலில் தனித் தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது.

இக்கொள்கையை வகுத்த பவுல் கூறியது பைபிளில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

அப்படியிருந்தும் மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ் செய்யாதவர்களையும் ஆண்டு கொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.

ரோமர் 5:14

அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒரு வேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.

ரோமர் 5:6,7

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.  இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்க கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. .நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில் அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால் ஒப்புரவாக்கப்பட்ட பின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.

ரோமர் 5:8-10

என்னவென்றால் கரத்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

ரோமர் 10:9

வெள்ளாட்டுக்கடா இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நித்திய மீட்பை உண்டு பண்ணினார். அதெப்படியெனில் காளை, வெள்ளாட்டுக்கடா, இவைகளின் இரத்தமும் தீட்டுப்பட்டவர்கள் மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் சரீர சுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால் நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

எபிரேயர் 9:12-14

1இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே அந்தச் சித்தத்தின் படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.

எபிரேயர் 10:10

இது தான் பவுல் உருவாக்கிய கிறித்தவ மதத்தின் அடிப்படைச் சித்தாந்தம்.

இந்தக் கொள்கை இயேசுவும், அவருக்கு முன் சென்ற நீதிமான்களும் போதித்த கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது. மேலும் பகுத்தறிவுக்கும், உலக நடைமுறைக்கும் எதிராக அமைந்துள்ளது.

மர்யம் புதல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: