Browse By

தன்னைத்தானே பொய்யன் என்று வாக்குமூலம் கொடுக்கும் பவுல்

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

images-21

நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.  நியாயப் பிரமாணமில்லாதவர் களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப் பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும் நான் தேவனுக்கு முன்பாக நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனா யிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே  இப்படிச் செய்கிறேன்.

1கொரிந்தியர்-9:19-23

அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன். அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன். அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிராகாமின் சந்ததியான்.

2கொரிந்தியர் 11:22

நான் ஆளுக்குத் தகுந்த மாதிரி நடித்து ஏமாற்றுபவன் என்று பவுலே ஒப்புக் கொண்ட பின் அவர் உருவாக்கிய கொள்கையை இயேசுவின் கொள்கை என்று கிறித்தவ மக்கள் நம்புவது தான் ஆச்சரியமாக உள்ளது.

மத்தேயு, மாற்கு, யோவான், லூக்கா ஆகிய நான்கு பேர் சுவிஷேசங்களை எழுதினார்கள். அது போல் சுவிஷேசத்தில் பங்காளியாவதற்காகவே புதுக் கொள்கையை உண்டாக்கியதாகவும் பவுல் ஒப்புக் கொள்கிறார்.

இன்னும் அவர் சொல்வதைக் கேளுங்கள்!

நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?  அப்படிச் சொல்லக் கூடாது; சொல்லக் கூடுமானால் தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?  அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?  நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

ரோமர் 3:5-8

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத இக்கொள்கையைக் கிறித்தவர்கள் மத்தியில் இவர் பிரச்சாரம் செய்த போது பவுல் கூறுவது பொய் என்று மக்கள் தூஷித்துத் தூற்றினார்கள். அதற்கு மறுப்புச் சொல்லப் புகுந்த பவுல் நான் பொய்யன் இல்லை என்றுதானே மறுக்க வேண்டும். அப்படி பவுல் மறுக்கவில்லை. மாறாக நான் பொய் தான் சொல்கிறேன்; ஆனாலும் அந்தப் பொய்யினால் தேவனுக்கு மகிமை ஏற்படுவதால் இந்தப் பொய்யான கொள்கையைச் சொல்வது தவறானது அல்ல என்பது தான் பவுலின் பதில். மேற்கண்ட வசனங்களில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

இயேசுவின் கொள்கையைச் சொன்னால் மக்களிடம் எடுபடாது. இரத்தம் சிந்தியதை வைத்து ஒரு கொள்கையை உருவாக்கினால் அது நன்றாக எடுபடும்; அதிக மக்கள் சேருவார்கள் என்பதற்காகவே இந்தக் கொள்கையை பவுல் உண்டாக்கினார்.

இன்றும் கூட கிறித்தவ மத குருமார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள் என்று பொது இடங்களில் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றுவதற்குக் கடவுளுக்காக பொய் சொல்லலாம் என்ற பவுல் கொள்கையே காரணம்.

பவுல் கூறுவது வேதத்துக்கும் இயேசுவுக்கும் எதிரானது என்று பண்டிதர்கள் அன்றைக்கே கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பவுல் சொல்லும் பதில் இது தான்.

எப்படியெனில் நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.

ரோமர் 7:15

எனக்கே விருப்பமில்லை தான்; ஆள் பிடிக்க வேண்டுமானால் இரத்ததைக் காட்டி பச்சாதாபம் தேடுவது தான் உதவும் என்பதற்காக எனக்கே விருப்பமில்லாத ஒன்றைப் பிரச்சாரம் செய்கிறேன் என்று ஒப்புக் கொள்கிறார்.

பின்பு அவன் போஜனம் பண்ணிப் பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சில நாள் இருந்து தாமதமின்றி கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.

அப்போஸ்தலர் 9:21

இயேசு மரணித்த பின் உயிர்த்தெழுந்தார் என்ற கொள்கையை உண்டாக்கியதே நான் தான் எனவும் தனது மகன் தீமேத்தயூவுக்கு எழுதிய அறிவுரையில் குறிப்பிடுகிறார் பவுல்.

தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்து என் சுவிசேஷத்தின்படியே மரித்தோரிலிருந்தெழுப்பப் பட்டவரென்று நினைத்துக் கொள்.

இரண்டாம் தீமேத்தயூ 2:8

இயேசு மரித்து விட்டு உயிர்த்தெழுந்தார் என்பதை நான் தான் உருவாக்கினேன். இயேசுவுக்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று பவுல் தெள்ளத் தெளிவாக ஒப்புக் கொண்ட பிறகும் இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத இக்கொள்கையை கிறித்தவர்கள் நம்புவது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

இன்னும் பவுல் சொல்வதைக் கேளுங்கள்

என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்;. என்னைச் சகித்துமிருக்கிறீர்களே.

2கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன்;. ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ண வேண்டாம்;. அப்படி எண்ணினால் நானும் சற்றே மேன்மை பாராட்டும்படி என்னைப் புத்தியீனனைப் போலாகிலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

2கொரிந்தியர் 11:16

அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன். அதிகமாய் அடிபட்டவன் அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன். அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.

2கொரிந்தியர் 11:23

ஒருவர் செய்த பாவத்துக்காக அவரது சந்ததிகள் பாவிகளாகப் பிறக்கிறார்கள் என்பதும், அந்தப் பாவத்துக்காக இயேசு தன்னைத் தானே சிலுவையில் பலியாக்கிக் கொண்டார் என்பதும் அறிவுக்குச் சம்மந்தமில்லாத கருத்து என்று பவுலுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு கருத்தைக் கூறுபவன் புத்தியீனன் அதாவது முட்டாள் என்பதும் அவருக்குப் புரிகிறது. ஆனாலும் எனக்கு முட்டாள் பட்டம் சூட்டினாலும் பரவாயில்லை; என் கருத்தை ஏற்றுக் கொள்ளு7ங்கள் என்று மன்றாடுவது மேற்கண்ட வசனங்களில் தெளிவாகத் தெரிகிறது.

உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று அவர்களைக் கொள்ளையிட்டேன்.

2கொரிந்தியர் 11:8

யூதர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு உங்களுக்கு ஊழியம் செய்தேன் என்று கூறுவதன் மூலம் இயேசுவின் கொள்கையை அழித்து ஒழிக்க இவரை யூதர்கள் சம்பளம் கொடுத்து நியமித்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. அல்லது யூதர்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு அவர்களுக்குத் துரோகம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இரண்டில் எது உண்மையானாலும் இவர் நம்பகமானவர் அல்ல. பொய்யும் புரட்டும் துரோகமும் தான் இவரது குனம் என்பது உறுதியாகிறது.

இத்தகைய ஒருவர் உருவாக்கிய கொள்கையை ஏற்று இயேசு போதித்த கொள்கையை விடுவது தான் இயேசுவுக்குச் செய்யும் மரியாதையா என்பதைக் கிறித்தவ அன்பர்கள் சிந்திக்க வேண்டும்.

ஜான்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: