Browse By

பைபிளில் பொருந்தாத போதனைகள்

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

images2

வேதம் என்பது கடவுளால் மனிதனுக்குக் காட்டப்பட்ட நல்வழியாகும். கடவுள் காட்டுகின்ற அந்த வழி அறிவுக்கு ஏற்றதாகவும், நியாயமானதாகவும், நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருப்பது அவசியமாகும்.

அறிவுக்குப் பொருந்தாததாகவும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவும் பலவீனர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அநீதி இழைக்கக் கூடியதாகவும் ஒரு நூலின் போதனை இருக்குமானால் அது இறை வேதமாக இருக்க முடியாது.

இத்தகைய நூல் இறை வேதமா? என்பது ஒரு புறமிருக்கட்டும்! நேர்மையான,அறிவுடைய மனிதனால் எழுதப்பட்டதாகக் கூட அந்நூல் இருக்க முடியாது. பைபிளின் போதனைகளில் இந்தக் குறைபாடுகள் ஏராளம் தாராளம்!

அ) விதவா விவாகம்

மனைவியை இழந்த கணவனுக்கு மறுமணம் செய்ய உரிமை இருப்பது போல்,கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுலகம் எதிர்பார்க்கின்றது.

ஆண், பெண் இரு பாலாருமே இல்லற உறவில் தேவையுடையவர்களாக உள்ளதால் ஒரு சாராருக்கு மட்டும் இந் உரிமை மறுக்கப்படக் கூடாது என்று பாரபட்சமில்லாத சிந்தனையுடையவர்கள் எவரும் கருதுவர்.

கணவனால் கைவிடப்பட்டவளுக்கும் கணவனை இழந்தவளுக்கும் உலகம் முழுவதும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. கிறித்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளும் கூட இந்த உரிமையை வழங்குகின்றன.

பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை இருந்தாக வேண்டும் என்பதில் உலகில் அறிவுடைய எவருமே மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

மொத்த மனித சமுதாயத்துக்கும் நியாயமாகத் தோன்றுகின்ற இந்த விஷயம் பைபிளுக்கு நியாயமாகத் தோன்றவில்லை. விதவா விவாகத்தை உறுதியாக மறுக்கின்றது. கடவுளின் கட்டளையாகவும் அது கூறப்படுகிறது.

நான் கர்த்தர். கன்னிகையாயிருக்க பெண்ணை அவன் விவாகம் செய்ய வேண்டும். விதவையையாகிலும் தள்ளப்பட்டவளையாகிலும் வேசியையாகிலும்,கற்பழிக்கப்பட்டவளையாகிலும் அவன் விவாகம் செய்யாமல் தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையையே விவாகம் பண்ண வேண்டும்.

(லேவியராகமம் 21:13,14)

நாகரீகமடைந்த எந்தச் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத இந்தப் போதனையை பைபிள் போதிக்கின்றது. விதவைகளையும் கணவனால் கைவிடப்பட்டவளையும் வேசிகளின் நிலையில் வைத்துப் பார்க்கிறது பைபிள்.

ஒருத்தி விதவையாவதிலும் தள்ளப்படுவதிலும் அவளுக்குச் சம்பந்தமில்லை. கர்த்தருடைய விதிப்படியே அவள் விதவையாகிறாள். அந்த விதவைகளுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பது மனிதனை விட கடவுளுக்கு நன்றாகவே தெரிய வேண்டும். அப்படித் தெரியாதவன் கடவுளாக இருக்க முடியாது.

எனவே நிச்சயமாக கடவுள் இது போன்ற அக்கிரமமான ஒரு போதனையைச் செய்திருக்க முடியாது. பெண்களை அடிமைப்படுத்திப் போகப் பொருளாகக் கருதியவர்கள் தாம் இது போன்ற போதனைகளைக் கடவுளின் பெயரால் செய்திருக்க முடியும்.

தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையைத் திருமணம் செய்ய வேண்டும் என்று பைபிள் கூறுவதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘தன் ஜனம்” என்று கூறுவதன் மூலம் ஜாதி வித்தியாசத்தைப் பேணிக் காக்கிறது பைபிள். எல்லா ஜனமும் ஒரு ஜனம் என்று தான் கடவுள் கருத முடியும். பல ஜனங்களாகப் பிரித்து ஒவ்வொரு ஜாதியையும் தத்தமது ஜாதிகளுக்குள்ளேயே திருமணம் செய்யச் சொல்வதன் மூலம் ஜாதி வேற்றுமையை, தீண்டாமையை பைபிள் ஆதரிக்கின்றது.

கடவுளின் வேதமாகப் பைபிள் இருக்க முடியாது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

ஆ) மாதவிடாய்

மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. ஆனால் பைபிள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றிக் கூறுவது என்ன தெரியுமா?

சூதகஸ்திரீதன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் விலக்கமாயிருக்க வேண்டும். அவளைத் தொடுகின்ற எவனும் சாய்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் விலக்கமாயிருக்கையில் எதின் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ, அதெல்லாம் தீட்டாகும். அவள் படுக்கையைத் தொடுகிற எவனும் தன் வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். சாயங்கால மட்டும் அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் படுக்கையின் மேலாகிலும் அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன் அவளோடு படுத்துக் கொண்டதும் அவள் தீட்டு அவன் மேல் பட்டதுமுண்டானால் அவன் ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான். அவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டுப்படும்.

(லேவியராகமம் 15:19,24)

இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றி பைபிள் இப்படிக் கூறுகிறது. தேவைப்படும் போது பெண்களை அனுபவித்துவிட்டு ‘அந்த” நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

அவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு,அந்தப் பொருட்களைத் தொட்டவனும் தீட்டு, அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர்போல் தீட்டு.

இதை விடப் பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? ‘அந்த” நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக் கூட கர்த்தர்உணரவில்லையா?

கிறித்தவப் பெண்களே! இது உங்களைச் சிந்திக்கத் தூண்டவில்லையா? கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா?

மேலும் கிறித்தவ உலகில் எந்தக் கிறித்தவராவது இதைக் கடைப்பிடித்து ஒழுக முடியுமா? மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்தப் போதனையைக் கர்த்தர்நிச்சயமாகச் சொல்லியிருக்க முடியாது. பெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில் தான் இது போன்ற கருத்துக்கள் உருவாயிருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இ) பிரசவத் தீட்டு

மாதவிடாய் விஷயமாகப் பொருந்தாத போதனையைக் கூறுவது போலவே பிரசிவிப்பதையும் பைபிள் பாவம் என்கிறது. அதற்காகப் பரிகாரமும் செய்யச் சொல்கிறது.

பின்னும் கர்த்தர்மோசேயினிடம், நீ இஸ்ரவேலோடு பேசி ஒரு ஸ்திரீ பிரசவித்து ஆண்பிள்ளைகளைப் பெற்றால் அவள், சூதகஸ்திரீ விலக்கமாய் இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழு நாள் தீட்டாய் இருப்பாள். எட்டாம் நாளில் அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலில் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். பின்பு அவள் 33 நாள் தன் உதிரச்சுத்திகரிப்பு நிலையில் இருந்து சுத்திரகரிப்பின் நாட்கள் நிறைவேறும் அளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்தையும் தொடக் கூடாது. பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது. பெண் பிள்ளைகளைப் பெற்றாளாகில் அவள் இரண்டு வாரம் சூதகஸ்திரியைப் போல் தீட்டாயிருந்து பின்பு66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு தான் பெற்ற ஆண் பிள்ளைக்காவது பெண் பிள்ளைக்காவது ஒரு வயதான ஆட்டுக் குட்டியை தகனப் பலியாகவும் ஒரு புறாக்குஞ்சியாவது காட்டுப் புறாவையாவது பாவ நிவாரணப்பலியாகவும் தரிசனக் கூடார வாசலில் ஆசாரியினிடம் அவள் கொண்டு வர வேண்டும். அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் படைத்து அவளுக்காக பிராயச்சித்தம் செய்வான். செய்யவே அவள் தன் உதிரம் ஊறும் தீட்டு நீங்கி சுத்தமாவாள்.

(லேவியராகமம் 12:1-7)

இத்தகைய போதனையைக் கர்த்தர்செய்திருப்பார்என்று அறிவுடைய எவரும் நம்ப முடியுமா? கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

ஆண் குழந்தையைப் பெற்றால் ஏழு நாட்கள் தீட்டு என்றும் பெண் குழந்தையைப் பெற்றால் இரண்டு வாரம் தீட்டு என்றும் கூறுவதையும் ஆண் குழந்தையைப் பெற்றால் 33 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு, பெண் குழந்தையைப் பெற்றால் 66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு என்று கூறுவதையும் கவனத்தில் கொள்க!

ஈ) வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து

மனிதர்கள் அனைவரும் ஆதாம், ஏவாள் என்ற இருவர்மூலமாகப் பல்கிப் பெருகியுள்ளனர். இது இஸ்லாமும் கிறித்தவமும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும். மனித சமுதாயம் முழுவதும் ஒரு தாய், தந்தையின் சந்ததிகள் எனும் போது அவர்களுக்கிடையே பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்க முடியாது.

ஒருவன் தனது நன்னடத்தையால், நல்ல கொள்கைகளை நம்புவதால் மற்றவனை விட உயர முடியும் என்பதை நம்முடைய அறிவு ஒப்புக் கொள்கிறது.

ஒரு குலத்தில் பிறந்து விட்ட காரணத்தினால் அவன் எவ்வளவு மோசமான செயல்களைச் செய்பவன் என்றாலும் வேறொரு குலத்தில் பிறந்தவனை விட அவன் எவ்வளவு நல்லொழுக்கமுள்ளவனாக இருந்தாலும் சிறப்புப் பெற்றவன்  என்ற சித்தாந்தத்தை நியாயமான அறிவுடைய எவரும் ஏற்க முடியாது.

பிறக்கின்ற குலத்தினடிப்படையில் மனிதர்கள் வித்தியாசப்படுவதே ஜாதிகள் தோன்றவும் தீண்டாமை வேரூன்றவும் காரணம்.

தீண்டாமையின் ஆணிவேராகத் திகழும் இந்த நச்சுக் கோட்பாட்டை பைபிளில் ஆதரிக்கிறது, போதிக்கின்றது.

அபிஷேகம் பெற்றவனும் தன் தகப்பன் பட்டதுக்கு வந்து ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை பண்ணப் பட்டவனுமாகிய ஆசாரியனே  பிராயசித்தம் செய்ய வேண்டும். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல் நூல் உடைகளை உடுத்திக் கொண்டு பரிசுத்த ஸ்தலத்துக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

(லேவியராகமம் 16: 32-33)

ஒரு ஜாதியினர்தாம் கடவுளுக்கு பூஜை செய்பவர்களாக வர முடியும். அதுவும் வாரிசடைப்படையில் தான் வர முடியும் என்று பைபிளில் போதனை செய்கிறது.

மனிதர்களை இப்படிப் பல ஜாதிகளாகப் பிரித்தது கடவுள் தான் எனவும் பைபிளில் பறை சாற்றுகிறது.

கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடி நீங்களும் எனக்கென்று பரித்தராயிருக்க வேண்டும். நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி நான் உங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் வித்தியாசம் பண்ணி உங்களைப் பிரித்தெடுத்தேன்.

(லேவியராகமம் 20:26)

இஸ்ரவேல் பரம்பரையினராகிய யூதர்களை உயர்ந்த ஜாதிகளாக ஆக்கியதாக பைபிளில் கர்த்தர்(?) கூறுகிறார். புரோகதிர்களுக்கும் தீண்டாமைக்கும் பைபிளில் வக்காலத்து வாங்குவதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் வசனங்களைப் பாருங்கள்!

அன்னியவன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கக் கூடாது. ஆசாரியின் வீட்டில் தங்கியிருக்கிறவனும் வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

(லேவியராகமம் 22:10)

ஆசாரியினுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

(லேவியராகமம் 22:12)

ஆசாரியன் (புரோகிதன்) குலத்தில் பிறந்து விட்டவளானாலும் அன்னிய ஜாதிக்கு அவள் வாழ்க்கைப் பட்டுவிட்டால் அவளும் அந்த அன்னிய ஜாதியில் சேர்ந்துவிடுகிறாள் என்கிறது பைபிள்.

ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்தது உண்டானால் அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய் கூட்டி பரிசுத்தமானவைகளோடும் கூட ஆசாரியனுக்கு கொடுக்கக்கடவன்.

(லேவியராகமம் 22:14)

நீ இஸ்ரவேல் புத்திரரோட சொல்ல வேண்டியது என்னவென்றால் நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதில் வெள்ளாமையை அறுக்கும் போது உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க் கட்டை ஆசாரியரிடத்தில் கொண்டு வரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கீகரிக்கப் படும்படி ஆசாரியின் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வு நாளுக்கு மறு நாள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும். நீங்கள் அந்தக் கதிர்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலோ பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜன பலியையும் திராட்சை பழரசத்திலே காற்படியாகிய பானப்பலியையும் செலுத்தக்கடவீர்கள்.

(லேவியராகமம் 23:19-13)

இவற்றையெல்லாம் கடவுளே சாப்பிடப் போகிறாரா? அல்லது ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுக்க வேண்டுமா? அதெல்லாம் கிடையாது. அவையனைத்தும் மதகுருமார்களுக்குச் சேர வேண்டும்.

அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக் குட்டிகளோடும் கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக் கடவன். கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையதாகும்.

(லேவியராகமம் 23:20)

பைபிளின் இந்த போதனைகளைப் பார்க்கும் பொழுது ஆசாரியர்கள் (அதாவது பூசாரிகள்) தங்கள் பிழைப்பை நடத்துவதற்காக கடவுளின் பெயரால் இட்டுக்கட்டி கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. எல்லா மாந்தரையும் ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ள கர்த்தர்மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாகப் பிரித்திருக்க மாட்டார்.

புரோகிதர்களுக்கு பைபிளில் நிர்ணயித்துள்ள தகுதிகளைப் பார்க்கும் போது அது கடவுளின் போதனையாக இருக்க முடியாது என்பது மேலும் உறுதியாகின்றது. அந்தத் தகுதிகளைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

பின்னும் கர்த்தர்மோசேயிடம் நீ ஆரோனோடும் பேசியதைச் சொல். உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவர்கள் தலைமுறை தோறும் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவரலாகாது. குருடன், சப்பானி, முகவிகாரமுள்ளவன் அளவுக்கு மிஞ்சி நீண்ட அவையவம் உள்ளவன் கால் ஒடிந்தவன், கை ஒடிந்தவன்,கூனன், அதிகம் மெலிந்தவன், பூவிழுந்த கண்ணன், சொறியன், அசருள்ளவன், விதை நசுங்கினவன் ஆகிய இவர்கள் கிட்டிவரலாகாது.

(லேவியராகமம் 21:16-23)

ஆணழகன் போட்டிக்கு வரத் தகுதியுள்ளவர்கள் மட்டும் தான் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவர வேண்டுமா? இது போன்ற குறையுள்ள கிறித்தவர்களே! நீங்கள் கடவுளை பூஜை செய்யவோ பலி செய்யவோ முடியாது என்று கூறும் இந்தப்போதனை உங்களுக்குத் தேவையா?

கடவுள் மனிதர்களின் நடத்தையையும் உள்ளத்தூய்மையையுமே கவனிக்க வேண்டும். உடலமைப்பில் காணப்படும் குறைகளையெல்லாம் கடவுள் கவனிக்க மாட்டார். ஏனெனில் இந்தக் குறைகளை மனிதன் தானாக உண்டாக்கிக் கொள்ளவில்லை. கடவுளே ஏற்படுத்தினார். எனவே மேற்கண்ட தகுதிகளை கடவுள் கூறியிருக்கவே முடியாது என்பது மிகத் தெளிவாகவே தெரிகின்றது.

உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று மனிதர்களை வித்தியாசப்படுத்துவது பழைய ஏற்பாட்டில் தான் உள்ளது. புதிய ஏற்பாட்டில் அத்தகைய போதனைகள் இல்லையே என்று கிறித்தவ உலகம் சமாளிக்கக் கூடும். இப்படிச் சமாளிக் முயல்வோர்முதலில் பழைய ஏற்பாடு என்பது இறை வேதம் அன்று என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளட்டும்! குறைந்த பட்சம் இத்தகைய போதனைகள் மலிந்த லேவியராகமத்தையாவது இறை வேதம் அல்ல என்று ஒப்புக்கொள்ளட்டும்.

இனிப் புதிய ஏற்பாட்டையும் அடையாளம் காட்டுவோம். இதோ மத்தேயு கூறுவதைக் கேளுங்கள்!

அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியஸ்திரீ ஒருத்தி அவிரிடத்தில் (இயேசுவிடத்தில்) வந்து ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்: என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்கு பிரதியுத்திரமாக அவர்ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே; இவளை அனுப்பிவிடு என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கவர்காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பபட்டேனேயன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே! எனக்கு  உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர்அவளை நோக்கி ‘பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றாள்” அதற்கு அவள் மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் திண்ணுமே என்றாள்.

(மத்தேயு 15:22-27)

இதைத் தொடர்ந்து மாற்கு குறிப்பிடும் போது ‘அப்பொழுது அவர்நீ சொன்ன வார்த்தையின் நிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளைவிட்டு நீங்கிப்போயிற்று என்றார்”

(மாற்கு 7:29) என்று சொல்கிறார்.

புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தக் கதையை ஒரு முறைக்குப் பலமுறை படியுங்கள்! தங்களை உயர்ந்த ஜாதியினர்என்று எண்ணி இருமாப்புக் கொண்ட ஒரு ஜாதியினர் தான் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி இப்படி கற்பனை செய்திருக்க முடியும் என்பதை உணர்வீர்கள்.

இஸ்ரவேல் புத்திரர்பிள்ளைகள் போன்றவர்களாம்! கானானிய இனத்தவர்நாய்களைப் போன்றவர்களாம்! உலகுக்கு ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் போதிக்க வந்த இயேசு இவ்வளவு அநாகரீகமாகப் பேசினார்என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா?ஜாதி வெறி பிடித்தவர்களாக இயேசுவைப் பற்றி நம்மால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை. ஆனால் பைபிளைத் தங்கள் சொந்த கற்பனையில் உருவாக்கிய மேல் ஜாதியினர்இயேசுவை அப்படித் தான் அறிமுகப்படுத்துகின்றனர்.

தன் மகளுக்கு நோய் ஏற்பட்டுள்ள நிலையில் மனம் நொந்து வேதனையுடன் வந்த பெண்ணை இயேசு மேலும் வார்த்தைகளால் புண்படுத்தியதாக இந்தக் கதை கூறுகின்றது. கடைசி நேரத்தில் அவளது பிசாசை இயேசு விரட்ட முன் வந்தது ஏன்?நீ சொன்ன வார்த்தையினிமித்தம் என்று இயேசு கூறுகிறார். அவள் தன்னை நாயினம் என்று ஒப்புக்கொண்டு வாக்குமூலம் தந்த காரணத்தினாலேயே அவர்பிசாசை ஓட்டியதாக பைபிள் பகிரங்கப்படுத்துகிறது.

அகில உலக இரட்சகர்என்று கிறித்தவ உலகம் அறிமுகப்படுத்தும் இயேசு இஸ்ரவேலர்என்ற உயர்ந்த ஜாதிக்குத் தான் இரட்சகராக பைபிளில் அறிமுகப்படுத்தப்படுகிறார். அந்த ஒரு ஜாதியை மட்டுமே மனித இனத்தில் சேர்க்கிறார். மற்ற ஜாதியினர்மிருக குலத்தில் உள்ளவர்கள் என்று கூறுகிறார்.

இவ்வளவு மோசமான வர்ணாசிரமத் தர்மத்துக்கு வக்காலத்து வாங்கக் கூடிய தீண்டாமையைப் பகிரங்கமாக ஆதரிக்கக்கூடிய மேற்கண்ட போதனைகளைக் கர்த்தரோ, இயேசுவோ கூறியிருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா? அவர்கள் பெயரால் பொய்களைப் புணைந்த இஸ்ரவேல் இனத்தின் கலப்படச் சரக்கே பைபிளாகும் என்பது உங்ளுக்குத் தெரியவில்லையா? இந்தப் போதனையைச் சிந்திக்கும் நடுநிலையானவர்கள் இந்த முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

இந்த அக்கிரமமான போதனைகளைக் கண்ட பிறகும் கூட இது கர்த்தரின் போதனை தான் இயேசுவின் போதனை தான் என்று கிறித்தவ உலகம் சாதிக்குமானால் இதை நடைமுறைப்படுத்திக் காட்டட்டும். தங்களின் பிரச்சார சாதனங்களை மூட்டை கட்டிக் கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சென்று விடட்டும்.

கடவுளே ஒதுக்கித்தள்ளி விட்ட- இயேசுவே புறக்கணித்துவிட்ட- நாய்களுக்கு அதாவது இஸ்ரவேல் ஜாதியைச் சேராதவர்களுக்கு இனிமேல் கிறித்தவப் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளட்டும்!

இரண்டில் ஒன்றைத் தான் அவர்கள் செய்ய முடியும். ஒன்று அது இறைவனின் போதனை இல்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இறைவனின் போதனை என்றால் உடனே அதை நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

பைபிள் வேதம் என்று கூறிக் கொண்டு அதன் போதனைக்கு மாற்றமாக நாய்களுக்குப் போதனை செய்வது என்று நடந்து கொண்டால் அவர்களுக்குக் கொள்கை எதுவும் இல்லை என்ற முடிவுக்கே நாம் வந்தாக வேண்டும்.

நாய்க்குட்டிகளுக்கும் ஒரு வார்த்தை கூறுவது நமக்கு அவசியமாகும். உங்களை மனித வர்க்கத்திலேயே சேர்க்காத வர்ணாசிரமக் கொள்கை உங்களுக்கு இனியும் தேவையா?

தன்னை நெருங்கவும் பூஜிக்கவும் புற சாதியினருக்குத் தகுதியில்லை என்று கூறும் போதனை தேவை தானா? அல்லது நாய்களாகாவே இருப்பது என்று தீர்மானம் செய்து கொண்டீர்களா?

எந்த வர்ணாசிரமக் கொடுமைக்கு, ஜாதீய அடக்குமுறைக்கு, தீண்டாமை இழிவுக்கு அஞ்சி, இந்து மதத்தைத் துறந்து உங்கள் முன்னோர்களும் நீங்களும் கிறித்தவ மதத்தைத் தழுவினீர்களோ, அதே வர்ணாசிரம, தீண்டாமைக் கொடுமைகளைப் பைபிளில் பார்க்கிறீர்கள் அல்லவா? உங்கள் உள்ளம் உண்மையான விடுதலைக்கும் மேன்மைக்கும் ஏங்கவில்லையா?

இறை நேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: