Browse By

மரணித்தப்பின் உயிர்த்தெழுந்தால் கடவுளாக முடியுமா?

Share this...
Share on FacebookShare on Google+Tweet about this on TwitterShare on LinkedInEmail this to someone

the_resurrection_of_christ_c15

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம்என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்.

இதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையினடிப்படையிலேயே இதை அணுகுவோம்.

மரணித்த பின் உயிர்த்தெழுதல் என்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.

ஒன்று மரணித்தல்

மற்றொன்று உயிர்த்தெழுதல்

இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பக்கூடிய கிறித்தவர்கள் இதை நம்புவதற்கு முன் அவர் மரணித்ததை நம்புகிறார்கள்! மரணித்தல் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதைச் சிந்தித்தார்களா?

யார் மரணத்தைச் சுவைக்கிறாரோ அவர் கடவுளாக இருக்கவே முடியாது என்று பைபிள் ஐயத்திற்கிடமின்றி கூறிக் கொண்டிருக்கிறது.

பாவஞ் செய்கிற ஆத்மாவே சாகும்… (எசக்கியேல் 18:20)

மனிதனாகப் பிறந்த அனைவரும் மரணிக்கின்றனர். எனவே அனைவரும் பாவஞ்செய்தவர்களே. இறைவன் மாத்திரம் தான் இதிலிருந்து தூய்மையானவன். இயேசு மரணித்ததால் அவரும் பாவம் செய்திருக்கிறார்; அதனால் அவர் கடவுளாக இருக்க முடியாதுஎன்பதை இந்த வசனம் கூறவில்லையா?

கர்த்தரோ மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா… (எரேமியா10:10)

கடவுள் உயிருடன் இருக்க வேண்டும் எனவும், நித்தியமாகவும், நிரந்தரமாகவும் இருக்க வேண்டும் எனவும் இவ்வசனம் கூறுகிறது. நிரந்தரமான உயிருள்ளவர்என்ற தகுதியை மரணித்ததன் மூலம் இயேசு இழந்து விடுகிறாரே! இதன் பின்னரும் அவரிடம் கடவுள் தன்மை இருப்பதாக நம்புவது பைபிளின் போதனைக்கே முரண் என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவில்லையா?

பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை. இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?

(ஏசாயா 40:28)

கடவுளுக்குச் சோர்வோ, களைப்போ கூட ஏற்படக் கூடாது! மிகப் பெரிய சோர்வாகிய மரணம் அவருக்கு வந்ததேன்?இதன் பின்னரும் இயேசுவிடம் கடவுள் தன்மையிருப்பதாக எப்படி நம்ப முடியும்?

நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்! (ஒ தீமோத்தேயு1:17)

கடவுளுக்கு மரணமும் ஏற்படக் கூடாது; மற்றவர்களுக்கு அவர் காட்சி தரவும் கூடாது என்று இந்த வசனம் கூறுகிறது.

இயேசுவிடம் இந்த இரண்டு பலவீனங்களும் அமைந்திருந்தன.

இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. எனவே அவருக்கு மரணம் ஏற்பட்டிருப்பதால் அவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது.

கடவுள் யாருக்கும் காட்சி தரக் கூடாது என்ற பைபிளின் மேற்கண்ட கூற்றுக்கு மாற்றமாக இயேசு பலராலும் காணப்பட்டுள்ளார். அவரை அனேகம் பேர் கண்களால் கண்டதற்கு நான்கு சுவிசேஷங்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

பலராலும் காணப்பட்ட ஒருவர் ஒருக்காலும் கடவுளாக முடியாது.

இயேசு மரணித்து விட்டாலும் மரணித்த பின் உயிர்த்தெழுந்திருப்பதால் அவர் கடவுளாகி விட்டார். உலகில் வாழும் போது தான் மனிதராக வாழ்ந்தார். மரணித்து உயிர்த்தெழுந்த பின் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டதுஎன்று கிறித்தவ மத குருமார்கள் கூறுவதை நாம் அறிவோம்.

இயேசு மரணித்த பின் உயிர்த்தெழவில்லை; அது தவறான தகவல் என்பதைஇயேசுவின் சிலுவைப் பலிஎன்ற நூலில் நாம் விளக்கியுள்ளோம். அது சரியான தகவல் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக ஆகி விடவில்லை.

ஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேசிய பேச்சுக்களிலும் கூட, தம்மை மனிதர் என்றே வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

இயேசு உயிர்த்தெழுந்த பின் கூறியதைக் கேளுங்கள்!

இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்கு போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

(யோவான் 20:17)

என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதே! எனக்கும் உங்களுக்கும் ஒரே கடவுள் தான்என்று உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு கூறுகிறார். மரணிப்பதற்கு முன்பு எப்படி அவர் கடவுளாக இருக்கவில்லையோ அப்படியே உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக மாறி விடவில்லை என்பதற்குத் தெளிவான வாக்கு மூலம் இது!

இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று உங்களுக்குச் சமாதானம்என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கிநீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதேஎன்று சொல்லித் தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டாஎன்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன் கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்தார்

(லூக்கா 24:36-43)

உயிர்த்தெழுந்த பின்பும் இயேசுவுக்கு மாம்சமும், எலும்புகளும் இருந்துள்ளன. இது கடவுளுக்கு இருக்க முடியாது.

உயிர்த்தெழுந்த பின்பும் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டாஎன்று பிறரிடம் யாசித்திருக்கிறார். இதுவும் மனிதனின் இயல்பு தான். உயிர்த்தெழுந்த பின்பும் அவருக்குப் பசித்திருக்கிறது. பொரித்த மீன் சாப்பிட்டிருக்கிறார். இந்தத் தன்மையும் கடவுளுக்கு இருக்க முடியாது.

உயிர்தெழுந்த பின்பும் சீடர்களும் வேறு சிலரும் இயேசுவைக் கண்களால் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்னரும் அவரை மற்றவர்கள் பார்த்திருப்பதால் அவர் கடவுள் தன்மை பெறவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இயேசு மரணிப்பதற்கு முன் எவ்வாறு மனிதராகவே – கடவுளின் அம்சம் ஒரு சிறிதும் அற்றவராகவே – இருந்தாரோ அப்படித் தான் உயிர்த்தெழுந்த பின்பும் மனிதத் தன்மை கொண்டவராகவே இருந்திருக்கிறார். இந்த வசனம் இதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.

மற்றவர்களும் உயிர்த்தெழுந்துள்ளனர்

மற்றொரு கோணத்திலும் இதைக் கிறித்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இயேசு உயிர்த்தெழுந்து அந்த நிலையிலேயே நீடிப்பதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் இது போல் இன்னும் பலர் இறந்த பின் உயிர்த்தெழுந்துள்ளதாக பைபிள் கூறுகிறதே? அவர்களையும் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர்கள் என்றோ கிறித்தவர்கள் கூறாமலிருப்பது ஏன்?

இதோ! பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டான்.

(ஆதியாகமம் 5:24)

விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலேயே அவன் காணாப்படாமற் போனான். (எபிரேயர் 11:5)

இயேசு கூட மரணத்திற்குப் பின்பே தேவனாலே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். கடவுளுக்கு மரணம் ஏற்பட முடியாது. ஆனால் ஏனோக்கு மரணத்தைக் காணாமலேயே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறான்.

கிறித்தவர்கள் இயேசுவை விடப் பெரிய கடவுளாக ஏனோக்கை ஏன் நம்புவதில்லை?விளக்குவார்களா?

அவர்கள் பேசிக் கொண்டு நடந்து போகையில் இதோ அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழற்காற்றில் பரலோகத்திற்கு ஏறிப் போனான். அதை எலிஷா கண்டு… (இரண்டாம் ராஜாக்கள் 2:11,12)

இயேசுவைக் கர்த்தர் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றதை எவரும் பார்த்ததில்லை. ஆனால் எலியாவைக் கர்த்தரே எடுத்துச் சென்றிருக்கிறார். உயிருடன் எடுத்துச் சென்றிருக்கிறார். இன்னொரு தீர்க்கதரிசியாகிய எலிஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே எலியா எடுத்துச் செல்லப்பட்டார். பலமான சாட்சியத்துடன் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால் எலியா இயேசுவை விடப் பெரிய கடவுள்என்று கிறித்தவர்கள் நம்ப வேண்டுமல்லவா?

எலியா, ஏனோக்கு போன்றோர் உயிருடன் பரலோகத்துக்குக் கர்த்தரால் எடுத்துக் கொள்ளப்பட்டதும் இன்னும் பலர் இறந்த பின் உயிர் பெற்றதாக பைபிள் கூறுவதும்இயேசு கடவுளல்லர்; கடவுளின் மகனுமல்லர்; மனிதர் தாம்என்பதை எள்ளளவும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

கிறித்தவர்களுக்கு உண்மையிலேயே பைபிளில் நம்பிக்கை இருக்குமானால் இயேசுவைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ நம்புவதை விட்டொழித்து ஒரே கடவுளின் பால் திரும்பட்டும்.

7. பரிசுத்த ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா?

இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம்.

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?

இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.

அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான்.

(லூக்கா 1:15)

அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக… (லூக்கா 1:67)

இவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்?

எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு… (லூக்கா 1:41)

யோவானும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்

அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்

அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்

என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா?

இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?

இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார்

( மத்தேயு 4:1-10) இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.

யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16)கூறுகிறார். அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.

இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்?

இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!

பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.

(மத்தேயு 10:20)

பரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயசுவின் சீடர்களும் கடவுளர்களா?

இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.

(லூக்கா 2:25)

இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.

(அப்போஸ்தலர் 5:32)

அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.

(அப்போஸ்தலர் 11:24)

இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும்,பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும்,பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு… (அப்போஸ்தலர் 6:5)

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்

(இரண்டாம் தீமோத்தேயு 1:14)

தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள். (இரண்டாம் பேதுரு 1:21)

இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்?

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை.

தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.

இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்?விளக்குவார்களா?

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.

சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.

(யாக்கோபு 1:13)

கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.

ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் – தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!

தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், ‘இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.

மார்டின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: